

தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூடஉயிரிழக்கவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் கரோனா தொற்று காலத்தில்எடுக்கப்பட்ட முன்னேற்பாடு பணிகள், மருத்துவக் கட்டமைப்பு ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
இந்த சந்திப்புக்குப்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தின் மருத்துவக்கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ், தமிழகத்தில் கரோனாதொற்று கட்டுக்குள் வந்தது குறித்துகேட்டார். அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை பார்வையிட்டுவிட்டு, சென்னையின் மருத்துவக் கட்டமைப்பை அறிந்து கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 56,631 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒருவருக்கு 2 தவணை தடுப்பூசி போட வேண்டும். அப்படிப் பார்த்தால் இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தேவையாக உள்ளன. மத்திய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகளை ஒதுக்கீடுசெய்கிறது. அந்த தடுப்பூசிகள் கட்டணம் பெற்று வழங்கப்படுகிறது. அதனால், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்திதடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
அதனால் தொழில் நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புநிதி (சிஎஸ்ஆர்) மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தனியார்மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக போடும் திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் 6.27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்று மாலை 5.42 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன. அதனால், இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது.
கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜனுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு இருந்தது. பல மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ்கைலாஷ் சாரங் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சுகாதாரத் துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் சென்னை வந்திருக்கிறேன். தற்போது மீண்டும் வந்துள்ளேன். தமிழகம் - மத்தியப் பிரதேசம் இடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், தொழில்நுட்பத்தை பகிர்ந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்” என்றார்.