

ரவுடிகள் என்கவுன்ட்டர் பட்டியல் தொடர்பான ஆடியோ சர்ச்சையில் சிக்கிய திருச்சி அல்லித்துறை சாமியாரையும், அவருடன் செல்போனில் பேசியதாகக் கூறப்படும் வழக்கறிஞரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (32). ‘தேஜஸ் சுவாமிகள்’ என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோயில் பகுதியில் வசித்தபடி ஜாதகம் பார்த்து வருகிறார். வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட முக்கிய நபர்கள் அதிகளவில் வந்து சென்றதால் குறுகிய காலத்தில் பிரபலமானார்.
இந்நிலையில் ரவுடிகள் என்கவுன்ட்டர் பட்டியல் தொடர்பாகவும், முக்கியப் பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு சைரன் காரில் சென்றது தொடர்பாகவும் வழக்கறிஞர் கார்த்திக் என்பவரிடம் சாமியார் பேசுவதுபோன்ற ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து சாமியாரிடம் ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கும் அந்த ஆடியோவுக்கும் தொடர்புஇல்லை என சாமியார் தெரிவித்தார்.
மேலும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறு செய்துஇருப்பதாக சோமரசம்பேட்டை காவல் நிலையம், சைபர் கிரைம்பிரிவு ஆகியவற்றில் சாமியாரும் கடந்த 12-ம் தேதி புகார் அளித்திருந்தார்.
6 பிரிவுகளின்கீழ் வழக்கு
இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி தனிப்படை போலீஸார்நேற்று அதிகாலை அல்லித்துறையில் உள்ள வீட்டுக்குச் சென்று சாமியாரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல ரவுடிகள் பட்டியல் குறித்து சாமியாருடன்செல்போனில் பேசியதாக கூறப்படும் வழக்கறிஞரான கார்த்திக் என்பவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் பொன்மலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாமியார், வழக்கறிஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டது ஏன்?
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘பொன்மலை பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜை, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கொட்டப்பட்டு ஜெய், பணம் கேட்டுமிரட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் ரவுடியை போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க உதவுமாறு அல்லித்துறை சாமியாரிடம் ரவுடி கொட்டப்பட்டு ஜெய் முறையிட்டதைத் தொடர்ந்து, புகார் அளித்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜை சாமியார், வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையிலேயே சாமியார், ரவுடி கொட்டப்பட்டு ஜெய், வழக்கறிஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.