Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

பொம்மிடி அருகே தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த சுற்றுலாவாசிகள் தடுத்து நிறுத்தம்

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் செல்ல முயன்றவர்களை வனத்துறையினர் தடுத்து எச்சரித்து அனுப்பினர்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையில் சேர்வராயன் வடக்கு வனச் சரகம் பொம்மிடி பிரிவு பகுதியில் ஏற்காடு அடிவாரத்தில் ஆனைமடுவு உள்ளது. இங்கு மழைக் காலங்களில் பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகும். இதை ரசிக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்கவும் சிலர் வருகை தருவர். இதற்கிடையில், மது அருந்தும் நோக்கத்துடனான குழுவினர் சிலர் இப்பகுதிக்குள் நுழைந்து வனம் மற்றும் வன விலங்குகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே, அப்பகுதியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்துடன் செல்பவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்த வனத்துறை அது தொடர்பாக ஆங்காங்கே அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளது.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை தினம் என்பதால் நேற்று சுற்று வட்டாரங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் இப்பகுதிக்கு வருகை தந்தனர். ஆனால், வனத்துறையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

தடுத்து நிறுத்தப்பட்டவர்களிடம் பேசிய வனத்துறை பணியாளர்கள், ‘ஆனைமடுவு பகுதியும் அதையொட்டிய வனப்பகுதியும் சுற்றுலா தலமாக பயன்படுத்த அரசால் அனுமதி அளிக்கப்படாத பகுதிகள். இங்கு காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. சுற்றுலா நோக்கத்துடன் வருவோர் மற்றும் மது அருந்தும் நோக்கத்துடன் வருவோரைக் கண்டால் இந்த வன விலங்குகள் மிரட்சி அடைகின்றன. தண்ணீர் தேடி நீர்நிலைகளை நோக்கி வரும் இந்த விலங்கினங்கள் மிரண்டு ஓடி ஆபத்தில் சிக்குகின்றன. சில நேரங்களில் காட்டெருமைகள் மனிதர்களை மூர்க்கமாக தாக்கவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், காட்டாற்று அருவிகளின் பெரிய பாறைகளில் யாரேனும் வழுக்கி விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ஆனைமடுவு பகுதிக்குள் அவசியமற்ற யாரையும் அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இவ்வாறு வர முயற்சிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துமீறி யாரேனும் நுழைந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனால், அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x