

சென்னையில் ஆடி சலுகைக்காக நகை, ஜவுளிக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக செல்வதால், மீண்டும் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள், பேருந்துகள், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை. இதனால், மீண்டும் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆடி மாதம் பிறந்துள்ளதால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பெரிய ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பெரும்பாலான பெரிய கடைகளில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். இதனால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்ட நெரிசலில் செல்கின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பெரும்பாலான மக்கள் வெளியில் சென்று வருகின்றனர். முன்பெல்லாம் அத்தியாவசிய பணிக்கு மட்டுமே சென்று வந்தனர். தற்போது, அதிகளவில் மக்கள் வெளியே சென்று வருகின்றனர். ஆனால், முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை பயன்படுத்துவதில் சிலர் அலட்சியம் காட்டுவதால் மற்றவர்களுக்கும் கரோனா அச்சுறுத்தல் இருக்கிறது. சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. எனவே, முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும்’’என்றனர்.