

கந்து வட்டி கொடுமையால் கொரட்டூரில் வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். செல்வகுமார் கொரட்டூரில் சுரங்கப் பாதை அருகே மளிகைக் கடை நடத்தி வந்தார். கடையை விரிவுபடுத்துவதற்காக கொரட்டூர் எல்லையம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்பவரிடம் ரூ.4 லட்சமும், அதே பகுதி தில்லைநகரைச் சேர்ந்த தியாகராஜன் (52) என்பவரிடம் ரூ.11 லட்சமும் கடனாக பெற்றிருந்தார்.
சுரங்கப் பாதை பணிகள் பல ஆண்டுகளாக நடந்ததாலும், கரோனா ஊரடங்காலும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க வாங்கிய கடனை விட அதிகமான வட்டியை செல்வகுமார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு கூறி நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் செல்வகுமார் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கடைக்குள்ளேயே செல்வகுமார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து கொரட்டூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொள்ளும் முன் செல்வகுமார் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், ‘என் சாவுக்கு பிரகாஷ், தியாகராஜன் ஆகிய இருவர்தான் காரணம். பிரகாஷிடம் வாங்கிய 4 லட்சம் ரூபாய் கடனுக்கு ரூ.10 லட்சம் ரூபாயும், தியாகராஜனிடம் வாங்கிய 11 லட்சம் ரூபாய் கடனுக்கு 33 லட்சம் ரூபாயும் கொடுத்துவிட்டேன். மறுபடியும் பணம் கேட்பதால் மன நிம்மதியில்லை. அவகாசம் கேட்டாலும் தராமல் அவர்கள் கஷ்டப்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வகுமாரின் மனைவி சரஸ்வதி போலீஸாரிடம் கூறும்போது, “பிரகாஷூம் தியாகராஜனும் வீட்டுக்கு வந்து கடனைக் கேட்டு மிரட்டிவிட்டுச் சென்றதால் அவர் மன உளைச்சலில் இருந்தார். நான் ஆறுதல் கூறிவந்தேன். அவர் தற்கொலை செய்துகொள்வார் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை” என்றார். கந்து வட்டியால் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்தது கொரட்டூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செல்வகுமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருக்கு கடன் கொடுத்த பிரகாஷ், தியாகராஜன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.