பணி நீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் வேண்டுகோள்

பணி நீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட என்யூஎல்எம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களிடம் குறை கேட்புக் கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அதை விசாரித்து தீர்வு காணுமாறு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் மாநகராட்சிக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த குறை கேட்புக் கூட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் (NULM) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களிடமிருந்து அதிக புகார்கள் வந்தன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பணிநீக்கம் செய்யப்பட்ட என்யூஎல்எம் தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மைப் பணி இல்லாவிட்டாலும், வேறு துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்றும், இப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் மூலமாக மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்திருந்தார். அவர் தற்போது முதல்வராக உள்ள நிலையில், அவர் மாநகராட்சிக்கு வைத்த கோரிக்கையை நிறைவேற்றி, தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ். மனிஷ், டி.சினேகா, சிம்ரன்ஜித் சிங் கலான், ஷரண்யா அரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in