Last Updated : 24 Feb, 2016 08:47 AM

 

Published : 24 Feb 2016 08:47 AM
Last Updated : 24 Feb 2016 08:47 AM

கோடை தாகத்தைத் தணிக்கும் மவுசு குறையாத, பாரம்பரிய அழகர்கோவில் மண்பானைகள்: தமிழகம் முழுவதும் விற்பனை

சுட்டெரிக்கும் வெயிலுடன் கோடை சீசன் தற்போது தொடங்கி விட்டதால் மதுரை மாவட்டம் அழகர் கோவில் பகுதியில் தயாரிக்கப்படும் மண்பானைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன.

கோடைகாலம் தொடங்கிவிட் டாலே வெயிலின் உக்கிரம் அதிக மாக இருக்கும். அப்போது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கடந்த காலங்களில் முன்னோர்கள் மண்பானை தண்ணீரை பருகி வந்தனர். நாகரிக வளர்ச்சியால் காலப்போக்கில் மண்பாண்டங்கள் மறைந்து ஃபிரிட்ஜில் வைத்த நீரை அருந்த ஆரம்பித்தனர். கால சுழற்சியில் மண்பாண்டங்களின் பயனை உணர்ந்த மக்கள், தற் போது கோடைகாலத்தில் மண் பாண்ட நீரை அருந்த ஆரம்பித்துள் ளனர்.

பொது இடங்களில் நீர் பந்தல்

அரசியல் கட்சிகளும், தன்னார் வலர்களும் சமீப காலமாக கோடை காலத்தில் பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து மண் பானை தண்ணீர் வைக்க ஆரம்பித் துள்ளனர். அதனால், கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் மண்பானை களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் பகுதியில் பாரம்பரியமாக மண்பானைகள் தயாரிக்கும் பணி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சுந்தர்ராஜன் பட்டியில் குடும்பம், குடும்பமாக ஆண்கள், பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் மண்பானைகள், தமிழகம் முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன.

விற்பனை அதிகரிப்பு

இதுகுறித்து சுந்தரராஜன்பட்டி மண்பாண்ட தொழிலாளி நல்லை யன்(44) கூறியதாவது: இந்த பகுதிகளில் 14 குடும்பத்தினர் மண் பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகி றேன். கண்மாயில் மண் அள்ளி பின்னர் அவற்றை காய வைப் போம்.

அதன் பின்னர் பானைகள் தயாரிப்புக்கு ஏற்ப அந்த மண்ணை பக்குவப்படுத்துவோம். இப்படி பல நிலைகளைக் கடந்து 3 நாட்களுக் குப் பின்னர் பானை தயாரிப்போம். தற்போது கோடையில் மட்டுமல் லாமல் பிற காலங்களிலும் மண் பானைகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

காலத்தின் தேவைக்கேற்ப..

பொங்கல் பானை, கலயம், சமையல் பானை என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப மண்பாண்ட வகைகளின் தேவை மாறுபடும். தை பொங்கல் என்றால் பொங்கல் பானைகளை தயாரிப்போம். கோடை காலம் என்றால் தண்ணீர் வைப்பதற்கான பானைகளை தயாரிப்போம். தற்போது கோடை காலம் என்பதால் தை மாதத்தில் இருந்தே பானைகளை தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம்.

வைகாசி மாதம் வரை தண்ணீர் பானை தயாரிக்கும் பணி நடை பெறும். மண்பானைகளின் தேவை தற்போது அதிகமாக இருப்பதால் விற்பனையும் நன்றாக உள்ளது. கோயம்புத்தூர், காரைக்குடி, தேவ கோட்டை போன்ற இடங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. ஆர்டர் கொடுத்த 10 அல்லது 15 நாட்களில் மண்பானைகளை ஏற்றுமதி செய்துவிடுவோம் என்றார்.

மண்பானை தண்ணீர் சிறந்தது

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை உணவியல் நிபுணர் ஜெயந்தியால் மண்பானை தண்ணீரின் பயன் பற்றி கூறியதாவது: குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது. அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x