

புதுவையில் ரேஷன் கடைகளை திறந்து, தமிழகத்தைப் போல் 14 வகையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க வேண்டுமென புதுச்சேரி எதிர்க் கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் சுமார் 510 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன. அவைகளில் 425 ரேஷன் கடைகள் கூட்டுறவு சொசைட்டியின் கீழும், 60 கடைகள் பாப்ஸ்கோவின் கீழும், மீதியுள்ள கடைகள் தனியாரின் கீழும் இயங்கி வந்தன.
இந்நிலையில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மக்களின் எண்ணத்துக்கு எதிராக அரிசிக்குப் பதில் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த முடிவெடுத்து, அதை செயல்படுத்தினார்.
இத்திட்டத்தை அமல்படுத்தியது முதல் புதுச்சேரியில் அரிசி உள் ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 40 மாதங்கள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இத னால் இதுவரை 7 ரேஷன்கடை ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பல குடும்பத் தலைவிகள் கணவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். பல ரேஷன் கடை ஊழியர்களின் பிள்ளைகள் மேல்நிலை படிப்பை தொடர முடியாமல், பாதியிலேயே படிப்பை நிறுத்தியுள்ளனர்.
ரேஷன் கடைகள் நடை பெறும் கட்டிடங்களுக்கு தர வேண்டியவாடகைகளும் கடந்த 2019-ம்ஆண்டு ஜூலை முதல் வழங்கப் படவில்லை. இதனால் 50க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளின் கட்டிட உரிமையாளர்கள் ரேஷன் கடையை காலி செய்யச் சொல்லி விட்டனர். அரசு வாடகையை சரியாக செலுத்திவிடும் என்று நம்பி, ரேஷன் கடைகளுக்கு கட்டிடத்தை விட்டவர்கள் வாடகை கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுபோன்ற பல் வேறு பாதிப்புகள் தொடர்ந்து இருந்து வருகிறது.
இதுபோன்ற நிலையில் திமுகவின் கருத்துப்படி, கடந்த தேர்தலில் முதல்வர் ரங்கசாமியும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு நேரடியாக அரிசி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து, தேர்தலில் வெற்றி பெற்றுஆட்சிக்கு வந்துள்ளார்.
ஆனால் முதல்வர் பொறுப் பேற்று 3 மாதங்கள் நிறைவுபெற உள்ள நிலையிலும் இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவும் இல்லை, மக்களுக்கு மாநில அரசால் நேரடியாக அரிசியும் வழங்கப்படவும் இல்லை.
உடனடியாக ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். அரிசி மட்டுமின்றி தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவதைப்போல் அரிசி, துவரம்பருப்பு, பச்சைப்பயிறு, உளுந்தம்பருப்பு, புளி உள்ளிட்ட 14 வகையான பொருட்களையும் மானிய விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
குறிப்பாக சொசைட்டி, பாப்ஸ்கோ மற்றும் தனி நபர்களின் கீழ் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளையும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் துறை ஊழியர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.