Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி இனிகோநகரை சேர்ந்த பிரேமிலா என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், அந்த பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் (28), தமிழரசன் (28), பெரியதாழையைச் சேர்ந்த ஜான் ஜெயபால் (40) ஆகிய 3 பேரும் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் திரும்பவில்லை. நேற்று முன்தினம் இரவு சில மீனவர்கள் பைபர் படகில் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸார்மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதேநேரத்தில், மீனவர்களும் சில பைபர் படகுகளில் சென்று தேடினர். அப்போது, பிரான்சிஸ் உள்ளிட்ட 3 பேரும் தூத்துக்குடியில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை கண்டனர்.

அவர்கள் சென்ற நாட்டுப்படகின் இயந்திரம் பழுதடைந்ததால், மேற்கொண்டு செல்ல முடியாமல் மூன்றுபேரும் படகில் தத்தளித்துள்ளனர். இதையடுத்து 3 மீனவர்களையும், படகையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் நேற்று மதியம் இனிகோநகர் கடற்கரைக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x