Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் விரைவில் போராட்டம்: வேலூர் மாநகராட்சி 15-வது வார்டு பொதுமக்கள் அறிவிப்பு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் சேறும், சகதியுமாக உள்ள சாலை.

வேலூர்

வேலூர் மாநகராட்சி 15-வது வார்டில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், மண் சாலைகள், தாழ் வானப்பகுதிகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளது.

வேலூர் மாநகராட்சி, நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 15 வார்டுகள் உள்ளன. இதில், 1-வது மண்டலம் காட்பாடி பகுதிக்குள் வருகிறது. இங்கு, முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் சிமென்ட் சாலை, தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள் ளன. ஆனால், 1 முதல் 5-வது வார்டுகள், 10 முதல் 15-ம் வார்டு வரை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.

குறிப்பாக, கல்புதூர், கஸ்தூரி பாய் தெரு, முத்தமிழ் நகர், பவானிநகர், வி.ஜி.ராவ்நகர், விருதம் பட்டு, ராஜீவ்காந்தி நகர், கழிஞ்சூர், பாலு நகர் கிழக்கு, அம்பேத்கர் நகர், ஹரியந்த் நகர், மதிநகர் விரிவு, பாலாஜி நகர், லட்சுமிபுரம்,  சைலம் நகர், சத்யா நகர், ஓ.சி.பெருமாள்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மற்றும் கால்வாய் வசதியில்லாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளன. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக, வேலூர் மாநகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட  ராஜீவ்காந்தி நகரில் சீரான சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பல இடங்களில் பள்ளங்களை தோண்டினர். அந்த பணிகள் முடிந்து பள்ளங்கள் சரிவர மூடவில்லை.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அனைத்து சாலைகளும் சேறும், சகதியுமாகவே மாறிவிட்டன. நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம், 1-வது மண்டல அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்தும், மழையால் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளோம்’’ என்றனர்.

இது குறித்து மாநகராட்சி மண்டல அலுவலர்களிடம் கேட்ட போது, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளோம். ஒரு சில வார்டுகளில் சாலைகள் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்ரீராஜீவ் காந்தி நகரில் சாலை களை சீரமைக்க ஏற்கெனவே டெண்டர்விடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x