Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

செங்கம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் உடைப்பால் கால்வாயில் வீணாக கலக்கும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

செங்கத்தில் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி வருகிறது.

செங்கம்

செங்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கால்வாயில் வீணாக கலப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க கடந்த 2010-ம் ஆண்டு சாத்தனூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுடன் செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 40 வழியோர கிராமங்கள் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது. வரும் 2040-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மேற்கண்ட பேரூராட்சி மற்றும் கிராமங்களின் மக்கள் தொகை சுமார் 71 ஆயிரம் என்பதால் 30.65 லட்சம் குடிநீர் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டது.

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் ஏற்கெனவே சுமார் 10.87 லட்சம் குடிநீர் செயல்பாட்டில் உள்ள நீராதாரங்கள் மூலம் உறிஞ்சப் படுவதால் சாத்தனூர் அணையில் இருந்து கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சி பகுதி மக்களுக்கு தினசரி ஒரு நபருக்கு 70 லிட்டர் வீதமும், கிராமப் பகுதிகளில் நபர் ஒருவருக்கு 10 லிட்டர் வீதமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

சுமார் ரூ.16 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செங்கம், புதுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக சாத்தனூர் அணையின் போயம்பள்ளி அருகே எடுக்கப்படும் தண்ணீரை தூய்மைப்படுத்த தாழையூத்து என்ற பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து செங்கம் பேரூராட்சிக்கு பிரதான குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எடுத்துவரப்பட்டு துக்காப்பேட்டை திருவள்ளுவர் நகர் அருகே அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அங்கிருந்து வீடுகளுக்கு விநியோ கம் செய்யப்படுகிறது.

சாத்தனூர் அணையில் இருந்து செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது. இந்த திட்டத்தால் அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சாமல் ஏற்கெனவே கீழ்நோக்கிச் சென்ற நிலத்தடி நீராதார பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.

ஆனால், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கால்வாயில் வீணாக கலப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘சாத்தனூர் அணையில் இருந்து செங்கம் நகருக்கு வரும் பிரதான குடிநீர் திட்ட குழாயில் துக்காப்பேட்டை எஸ்பிஐ வங்கி எதிரில், சூப்பர் மார்க்கெட் எதிரில் என இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி கால்வாயில் வீணாக கலக்கிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் குழாய் இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தினரும் சரி செய்ய முன்வரவில்லை. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அலட்சியமாக பதில் அளிக்கின் றனர்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x