ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகையை முன்னிட்டு சாலை சீரமைப்புப் பணி: மாநகராட்சி சுற்றறிக்கை

ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகையை முன்னிட்டு சாலை சீரமைப்புப் பணி: மாநகராட்சி சுற்றறிக்கை
Updated on
1 min read

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத் மதுரைக்கு நாளை ஜூலை 22 ஆம் தேதி இரவு வரும்நிலையில் அவர் செல்லும் இடங்கள், சாலைகளில் சிறப்பு சீரமைப்பு பணி, தூய்மைப்பணி மேற்கொள்ள மாநகராட்சி துணை ஆணையர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 4வது மண்டலத்திற்குட்பட்ட சத்தியசாய் நகரில் சாய்பாபா கோயில் உள்ளது. இந்த கோயிலில் நாளை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகிறார்.

அவரது வருகையை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் அதன் உதவி ஆணையர், அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள நிகழ்ச்சிகளில் 22 ஆம் தேதி முதல் 26 அம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தால், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்.

அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறால் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து முண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்து வரும்நிலையில் அதன் நிர்வாகத்தின் கீழ் நடக்கும் மதுரை மாநகாட்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையை முன்னிட்டு பிரதமர், முதல்வருக்கு வருகைக்கு இணையாக சிறப்பு உத்தரவு பிறப்பித்து சிறப்பு தூய்மைப்பணி, கண்காணிப்பு பணிக்கு என மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டிருப்பது ஆளுங்கட்சியினர் மட்டுமில்லாது கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘ஆர்எஸ்எஸ் தலைவர் உயர் பாதுகாப்பு பெற்றவர். அவர் மட்டுமல்ல அவரைப் போன்ற உயர் பாதுகாப்பு விஐபிகள் வரும்போது போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பித்து அவர்கள் செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும். அவர்கள் செல்லும்பகுதியில் ஏதாவது போக்குவரத்திற்கு தடை ஏற்படாமல் இருக்கவே இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது, ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in