Published : 21 Jul 2021 05:26 PM
Last Updated : 21 Jul 2021 05:26 PM

வழக்குப் பதியாமல் குற்றவாளிகளை விடுவித்த விவகாரம்; திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அனைவரும் சஸ்பெண்ட்

தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதியாமல், அவர்களை விடுவித்த விவகாரத்தில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட அங்கு பணியாற்றும் 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மதுப் பிரியர்கள் அண்டை மாநிலமான புதுச்சேரிக்குச் சென்று அங்கு மது பாட்டில்களை வாங்கி வந்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தனர். இதனைத் தடுக்கும் விதமாக, பல்வேறு இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து மது பாட்டில்களைக் கடத்தி வருபவர்களைக் கைது செய்து வந்தனர்.

இதற்கிடையில், கடந்த மாதம் புதுச்சேரி மாநிலத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் தங்களது உடல் முழுவதும் மதுபான பாட்டில்களைக் கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தனர். இதனைத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி என்னுமிடத்தில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு போலீஸார், வாகன சோதனையின்போது கண்டுபிடித்தனர். அந்த 2 இளைஞர்களையும் போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் அவர்கள் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்தனர்.

இதனிடையே போலீஸார் ஆலத்தம்பாடியில் அவ்விரு இளைஞர்களையும் சாலையில் நிற்கவைத்து சோதனை செய்தபோது அந்தப் பகுதியில் இருந்த சில நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதனால் இந்த இளைஞர்கள் குறித்து வீடியோ வைரலான நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற உண்மை வெளிவந்தது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் விசாரணை நடத்தியதில், சம்பவம் உண்மை எனவும், அதே நேரத்தில் வழக்குத் தொடுக்காமல் இருவரையும் போலீஸார் விடுவித்ததும் தெரியவந்தது. அதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ்குமாருக்குப் பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில், காவல்துறையினரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமைக் காவலர்கள் சண்முகசுந்தரம், ராஜா, முதல் நிலைக் காவலர்கள் பாரதிதாசன், விமலா உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x