Last Updated : 21 Jul, 2021 05:20 PM

 

Published : 21 Jul 2021 05:20 PM
Last Updated : 21 Jul 2021 05:20 PM

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 சாமி சிலைகள் பறிமுதல்

  புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 சாமி சிலைகளைத் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது வீட்டில் சாமி சிலைகள் இருப்பதாகத் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கதிரவன் தலைமையில், ஏடிஎஸ்பி ராஜாராம், இன்ஸ்பெக்டர் ரஜினா மற்றும் போலீஸார் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் சுரேஷ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வீட்டில் சுமார் 3 அடி உயரம், ஒன்றரை அடி உயரம் கொண்ட 2 நடராஜர் சிலைகளும், இரண்டே கால் அடி உயரம், அரை அடி உயரம் கொண்ட 2 அம்மன் சிலைகளும் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அதுகுறித்த உரிய ஆவணங்கள் சுரேஷிடம் இல்லாததால் அந்த சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஆனால், சுரேஷ் வீட்டார் மற்றும் சிலர், அந்தச் சிலைகள் பித்தளை என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்தச் சிலைகளை போலீஸாரிடம் தர மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, தமிழக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அந்த 4 சிலைகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கதிரவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு நடராஜர், அம்மன் சிலைகள் கிடைத்தன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், பரிசோதனைக்காக இந்தச் சிலைகள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்படும். பரிசோதனை முடிவில் அந்தச் சிலைகள் ஐம்பொன் சிலைகளா? அல்லது பித்தளை சிலைகளா? என்பது தெரியவரும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.’’என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x