

ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களில் உரிமம் இன்றி வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 7 நாட்டுத் துப்பாக்கிகளைச் சிறப்புக் காவல் படையினர் பறிமுதல் செய்து, அதில் தொடர்புடைய 8 பேரைக் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மலை மற்றும் வனம் சார்ந்த கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்விக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா தலைமையில் கெலமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர்கள் பார்த்தீபன், நாகமணி ஆகியோர் அடங்கிய சிறப்புக் காவல் படை அமைக்கப்பட்டு வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தச் சிறப்புப் படையினரின் சோதனையில் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள காடுலக்கச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பா (45), லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (47), பேவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திம்மராயன் (42), இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (37), உப்புபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (25), யுபுரம் கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா (50), உப்புபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா (60) ஆகிய 7 பேருடைய வீடுகளில் நடத்திய சோதனையில், உரிமம் இன்றி மறைத்து வைத்திருந்த 7 நாட்டுத் துப்பாக்கிகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவற்றை வைத்திருந்த 7 பேரையும் கைது செய்தனர்.
மேலும், நாட்டுத் துப்பாக்கிக்குத் தேவையான தோட்டாக்களை விற்பனை செய்து வந்த கெலமங்கலத்தைச் சேர்ந்த சீனிவாசன் (45) என்பவரையும் சிறப்புக் காவல் படையினர் கைது செய்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் இந்த கிராம மக்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.