10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி: போக்சோ சட்டம் குறித்து நீதிபதிகளுக்குப் பயிற்சி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

10 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு, இந்தச் சட்டம் பற்றிய பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர், பக்கத்து வீட்டில் வசிப்பவரின் 10 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததுடன், சிறுமியை மிரட்டியதாகவும், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2014-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் சிறப்பு நீதிமன்றம், வெங்கடாச்சலத்துக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்துத் தீரப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து வெங்கடாச்சலம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (ஜூலை 21) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வெங்கடாச்சலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

ஆனால், போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி, இரு பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

தண்டனைக் காலத்தை அனுபவிக்கும் வகையில் வெங்கடாச்சலத்தைச் சிறையில் அடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நாமக்கல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு, சட்டம் பற்றிய பயிற்சிகளைத் தலைமை நீதிபதி அனுமதி பெற்று வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும், தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக இயக்குநருக்கும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in