

கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்விஎஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரின் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் ஸ்வாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி மற்றும் அம்பேத்கர் புரட்சி கழக நிறுவனர் பெரு.வெங்கடேசன் ஆகிய 4 பேரிடமும் 6-ம் தேதி (நாளை) வரை சிபிசிஐடி போலீஸார் காவலில் வைத்து விசாரணை நடத்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிசிஐடி போலீஸார் நேற்று வாசுகியை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வந்து அவரது வீடு மற்றும் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகளை வரவழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்