

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்கிறார் என, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர், ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்துக் கள ஆய்வு மேற்கொண்டு, ரூ.12 கோடி மதிப்பீட்டில் 292 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் திட்டப் பணிகள் மற்றும் வாழ்வாதாரச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது.
இதில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:
"தமிழக முதல்வர் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்று, நாட்டின் பொருளாதாரத்தையும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறார். கரோனா பேரிடர்க் காலங்களில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டதுபோல், குறிப்பாக, மருத்துவம் சார்ந்த பணியாக இருந்தாலும், மக்கள் நல்வாழ்வுத் துறையில் மருத்துவத் துறைக்கு உதவியாகச் செயல்பட்ட துறைகளில் ஊரக வளர்ச்சித்துறையும் மிகவும் முக்கியமானது என்றால், அது மிகையாகாது.
அவர்களோடு காவல்துறை, வருவாய்த்துறை போன்ற துறைகள் எல்லாம் இணைந்து, எடுத்துக் கொண்ட முழு முயற்சியின் காரணமாகத்தான் இன்றைக்கு கரோனா தொற்று எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் வெகுவாகக் குறைந்துள்ளது. அதேபோல, தமிழகத்தை வளா்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்கு அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொற்கால ஆட்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது இந்தத் துறை எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோன்று மீண்டும் செயல்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்".
இவ்வாறு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.