

கும்மிடிப்பூண்டி அருகே பூட்டிய வீட்டில் பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள திப்பன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரது கணவர் இறந்து விட்டதால் ரயிலில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ரோசம்மாள் தலையாரிப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு அம்பிகா வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஆனால் வீட்டில் இருந்த ரோசம்மாள் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அம்பிகா, வீட்டின் ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே இருந்த கட்டிலில் மகள் ரோசம்மாள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அம்பிகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப் பற்றி பரிசோதனைக்காக கும்மிடிப் பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி ரோசம்மாளின் கழுத்தில் கம்பியால் தாக்கிய தற்கான ரத்த காயம் காணப்பட்டது. மேலும் அவரது ஆடைகளும் கிழிந்து இருந்தன. உடைந்த ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் தப்பி ஓடியதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே மாணவி ரோசம்மாள் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து கொலையாளி ஜன்ன லை உடைத்து புகுந்து அவரை பாலியல் வன்முறை முயற்சியில் கொலை செய்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மாணவி ரோசம்மாளின் வீட்டின் அருகே அதிக அளவு குடியிருப் புகள் இல்லை. எனவே கொலை நடந்த போது மாணவி ரோசம் மாளின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவில்லை. இதனால் கொலையாளி எளிதாக தப்பி சென்று உள்ளார்.
இதற்கிடையே, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலையுண்ட மாணவி ரோசம்மாளை கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு குடி பழக்கம் இருப்பது தெரிந்ததும் மாணவியை திருமணம் செய்து கொடுக்க குடும்பத்தினர் மறுத்து உள்ளனர். இருப்பினும் அந்த நபர் அடிக்கடி வீட்டிற்கு வந்து ரோசம்மாளை திருமணம் செய்து கொடுக்கும்படி அவரது தாய் அம்பிகாவிடம் தகராறு செய்ததாகவும், மாலையில் பள்ளி முடிந்து ரோசம்மாள் வீட்டுக்கு திரும்பும் போது பலமுறை அவரை பின் தொடர்ந்து வந்து தொல்லையும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று லாரி டிரைவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணையில் மாணவி ரோசம்மாளை தான் கொலை செய்யவில்லை என்று கூறி உள்ளார். எனினும், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.