தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள்

தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள்
Updated on
2 min read

அல்லாஹுவின் அருளினால் முஸ்லிம்கள் தியாகப் பெருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை இன்று உவகையுடன் கொண்டாடுகின்றனர். ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். இஸ்லாத்தின் 5-வது கடமை ‘ஹஜ்’ கடமையாகும். தகுதியுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது அவசியமாகும். வல்ல நாயன், அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

‘‘மனித இனத்துக்கு ஹஜ் (புனிதபயணம்) குறித்து பிரகடனப்படுத்துவீராக. அவர்கள் நடந்தும், தொலைதூரப் பாதைகளிலிருந்து வரும் ஒவ்வொரு (நெடும் பயணத்தால்) மெலிந்த ஒட்டகங்களிலும் உம்மிடம் வருவார்கள். அதன் நற்பலனை அவர்களுக்காகக் காணவும், அவர்களுக்கு அவன் அளித்துள்ள கால்நடைகள் மீது ஒரு குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைநினைவுகூரவும் (அவர்கள் வருவார்கள்) பின்னர், அவற்றிலிருந்து உண்ணுங்கள். மேலும் கஷ்டத்திலிருப்பவர்களுக்கும் வறியவர்களுக்கும் (அதிலிருந்து) உணவளியுங்கள்.’’ (ஸுரத்துல் ஹஜ்: 28,29)

ஹஜ் கடமை ஓர் ஆன்மிகப் பயணமாகும். இதன்மூலம் பெறப்படும் ஆன்மிக அனுபவம், கிடைக்கும் பயிற்சிகள், மனிதனுக்கு இறைநெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறையச்சம், உளப்பக்குவம், தியாக சிந்தனை, ஒற்றுமை, பொறுமை போன்றவைகளை ஏற் படுத்துகிறது.

ஹஜ் கடமையில் ஈடுபடுவோர் ‘லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்’என்ற தல்பியாவை முழங்கியவர்களாக ஹஜ்ஜின் சகல கிரியைகளிலும் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் ஈடுபடுவது அருளும் பக்தியும் நிறைந்த இனிய காட்சியாகும். உலக முஸ்லிம்களான நாங்கள் அனைவரும் ஒரே கொடியின் கீழ்ஒற்றுமையாக வாழ வேண்டும் என ஹஜ் கிரியைகள் உணர்த்துகின்றன.

இறைவன் கட்டளைக்கு கீழ்படிதல்

இந்த தியாகத் திருநாள், தந்தைதனது மகனை ‘குர்பான்’ செய்வதற்காகவும், மகன் தன்னைத்தானேதியாகம் செய்வதற்காகவும் முன்வந்த தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். இப்ராஹீம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவி ஹாஜரா நாயகி அவர்களும், அவர்களின் அருமை மகன்இஸ்மாயீல் (அலை) அவர்களும்செய்த மகத்தான தியாகத்தை இந்தப் பெருநாள் நினைவுபடுத்துகிறது. இப்ராஹீம் (அலை) அவர்கள், தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட கனவொன்று கண்டார்கள். இறைவனின் கட்டளைக்கு கீழ்படியும் வகையில் தனது அன்பு மகனைபலியிட இப்ராஹீம் (அலை) அவர்கள் துணிந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது அருமைமகனை அறுத்துப் பலியிட துணிந்தபோது, ஒரு ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தார்கள்.

இந்த தியாகத்தின் உச்ச நிலையை முழு உலகிலும் உள்ளஇறையடியார்களுக்கு உணர்த்துவதே குர்பானின் நோக்கமாகும். ஹஜ் பெருநாளின் தார்ப்பரியமும் தியாகத்திலேயே தங்கியுள்ளது. அதனால்தான் இந்த பெருநாள் தியாகப் பெருநாள் எனப் போற்றப்படுகிறது. ஆடுகளையும் மாடுகளையும் ‘குர்பானி’ கொடுப்பதனால் இந்தப் பெருநாளை கொண்டாடுகின்ற கடமை முடிந்துவிடாது. அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது,

‘‘அவற்றின் இறைச்சியும் அவற்றின் ரத்தமும் ஒருபோதும் அல்லாஹ்வை சென்றடைவதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களில் உள்ள இறையச்சம்தான் அவனைச்சென்றடைகிறது. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை காட்டியதற்காக நீங்கள் அவனது பெருமையை எடுத்துரைக்க இவ்வாறு அவன் அவற்றை உங்களுக்கு தொண்டு செய்ய வைத்தான்.

நற்செயல் செய்பவர்களுக்கு நீர் நற்கூலி வழங்குவீராக!’’

(அல் ஹஜ்: 38-வது வசனம்)

கட்டுரையாளர்:

தாளாளர்

ஜாமிஅத்துல் ஹாஜரா மகளிர் அரபிக் கல்லூரி. திண்டுக்கல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in