Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்: அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னியல், மின்னணு, எரிசக்தி துறைகள்

எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பும், தேவையும் உள்ள படிப்புகளாக மின்னியல், மின்னணு, எரிசக்தி துறைகள் விளங்குகின்றன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதாவிஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வவித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 13 நாட்கள் நடக்க உள்ளது. கடந்த 18-ம் தேதிநடந்த 5-வது நிகழ்வில் மின்னியல், மின்னணு, எரிசக்தி துறை படிப்புகள் எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

சென்னை அண்ணா பல்கலை. முன்னாள் டீன், சிஇஜி டாக்டர் எஸ்.இனியன்: வாகன உற்பத்தி உள்ளிட்டஎந்த துறையாக இருந்தாலும் மின்பொறியாளர் இன்றி இயங்காது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் மின் பொறியாளர்களின் பங்கு மிக அதிகம். எரிசக்தி அறிவியல் சார்ந்தஅனல்மின், நீர்மின், அணுமின் நிலையங்களிலும் மின்பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, விமான போக்குவரத்து துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மின் பொறியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

மாணவர்கள் 3-ம் ஆண்டு பயிலும்போதே, ‘கேட்’ தேர்வுக்கு தயாராகவேண்டும். அதன் அடிப்படையிலேயே பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். படிக்கும்போதே சிறுசிறு புராஜக்ட்களை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் உதவி துணைத் தலைவர் (ஹெச் ஆர்) எம்.எஸ்.சுவாமிநாதன்: ஒரு மின் பொறியாளருக்கு மின்உற்பத்தி, மின்உற்பத்தி கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, மின்சார வாகனங்கள் உற்பத்தியில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார தேவை 80 ஆயிரம் மெகாவாட்டாக உயரப்போகிறது. அதனால் மின் உற்பத்தி துறைக்கு ஏராளமானமின்பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். மின்சாரத்தில் இயங்கும்கார், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதிலும்மின் பொறியாளர் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. பெட்ரோலியஎண்ணெய், எரிவாயு தொழிற்சாலைகளிலும் மின்பொறியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

கல்லூரி இறுதி ஆண்டு புராஜக்ட் செய்யும்போது, ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதமானதாக அந்த புராஜக்ட் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் பயிற்சி பொறியியல் பட்டதாரியாக சேரும் ஒருவர், தான் கல்லூரியில் படித்த அனைத்து விவரங்களையும் புகுத்தி பணியாற்ற வேண்டும். அப்போதுதான் அவர் அடுத்தடுத்த பணி நிலைகளுக்கு முன்னேற முடியும்.

கோவை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் பேராசிரியர் டாக்டர் எஸ்.பாலமுருகன்: உலகில் 30 ஆண்டுகளுக்கு பிறகு எல்லா வாகனங்களும்மின்சாரத்தில் இயங்கக் கூடியதாகவே இருக்கும். மருத்துவ பரிசோதனை கருவி, ரோபோ தேவையும் அதிகரித்து வருகிறது. மின் பொறியியல் படிப்பில், எரிசக்தி உற்பத்தி,பகிர்மானம், வீடுகளைச் சென்றடைவது, ஏசி, டிசி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்கள், ஜெனரேட்டர், மின்மாற்றிகளின் செயல்பாடுகள் போன்றவை அடிப்படை பாடமாக இருக்கும். சூரிய ஒளி மின்சாரத்தை வடங்களில் கொண்டு செல்லுதல், வீடுகளில் உள்ள மின்விசிறி, மின்விளக்கை கைபேசி மூலமாக இயக்கஒரு ஸ்மார்ட் மீட்டரை கண்டுபிடிக்கும்போது, அதை அமெரிக்காவில் இருந்து ஒருவர் இயக்குவதை தடுத்தல் போன்ற சவால்களுக்கு மின்பொறியாளர்கள் தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து, பொறியியல் படிப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/watch?v=6j5y4YCmQRI என்ற லிங்க்கில் முழு நிகழ்வையும் கண்டு பயன் பெறலாம்.

'உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்வில் வரும் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 23) சென்னை கிளஸ்டிரக்ஸ் டாடா பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனர் (அனாலிஸ்டிக்ஸ் & பிளாக்செயின்) வெங்கட் ரமணி, ‘கிளவுட் கம்ப்யூட்டிங் - சைபர் செக்யூரிட்டி’ படிப்பு குறித்தும், சனிக்கிழமை (ஜூலை 24) நிகழ்வில் ஆந்திராவிலுள்ள ‘அல்ஸ்டம்’ (ALSTOM) நிறுவனத்தின் குவாலிட்டி டைரக்டர் எஸ்.சண்முகசுந்தரம், ‘மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல்’ படிப்பு குறித்தும், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை-25) நிகழ்வில் மும்பையிலுள்ள ஆங்கிலோ ஈஸ்டன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மரைன் மாஸ்டர் கேப்டன் டி.ராமநாதன், ‘மரைன் & ஓசோன் இன்ஜினீயரிங்’ படிப்பு குறித்தும் ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்கள்.
இந்த ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள்
https:bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x