Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

அமைதி, நல்லிணக்கம், ஆரோக்கியத்தால் மக்களை வளப்படுத்தட்டும்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் பக்ரீத் பெருநாள் வாழ்த்து

ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஈகைத் திருநாளாம் பக்ரீத் நன்னாளில் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்த புனித நாள் அன்பு, சகோதரத்துவம் மற்றும் சேவையை பறைசாற்றுகிறது. இந்நாள், அமைதி, நல்லிணக்கம், பெருந்தன்மை, ஆரோக்கியத்தால் மக்களை வளப்படுத்தட்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’என்ற உயரிய கோட்பாடுகள், முஸ்லிம்களின் கண்ணின் மணிகளாகஎன்றும் இருந்து வருகின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் முஸ்லிம் பெருமக்கள் அனைவரும், இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனாகட்டுப்பாடுகளைப் பின்பற்றியும் கொண்டாட வேண்டுகிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி: விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும். அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும்.முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் எங்கள் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகத்தில் காலம்காலமாக உறவுமுறை கூறி உணர்வுப்பூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டுமகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும், சமூக ஒற்றுமைக்கும் வலுசேர்க்க வாய்த்திட்ட பொன்னாள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இறைபக்தியையும் கடந்து ஈகை திருநாள் வலியுறுத்தும் செய்தி, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பாராட்ட வேண்டும் என்பதாகும். அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான கருணை என்றும் நீடிக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: முஸ்லிம் பெருமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும், சமவாய்ப்பும், சமஉரிமையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

ஐயுஎம்எல் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: இந்தியர்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வில், அன்பும், அறனும் பெருகிட, ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம், தேசத்தை உயர்த்துவோம்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தியாகத்தின் பெருமையை உலகுக்கு விளக்கும் உன்னதப் பெருநாள் தியாகத் திருநாள்.மனிதர்கள் மீது காட்டப்படும் அன்பும், அக்கறையும் தான், உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தழைத்தோங்கச் செய்யும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தவாக தலைவர் தி.வேல்முருகன், தமாகா தலைவர்ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலர் டிடிவிதினகரன், சமக தலைவர் சரத்குமார், மஜக பொதுச்செயலர் மு.தமிமுன் அன்சாரி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம்.முகம்மதுசேக் அன்சாரி, மூவேந்தர் முன்னணிக்கழக தலைவர் டாக்டர்ந.சேதுராமன், தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஜெ.ஹாஜாகனி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, சு.திருநாவுக்கரசர் எம்பி., பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x