காட்பாடி அருகே நில பிரச்சினையில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 3 பேர் மீது புகார்: ஆட்சியர், எஸ்பிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

காட்பாடி அருகே நில பிரச்சினையில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 3 பேர் மீது புகார்: ஆட்சியர், எஸ்பிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

காட்பாடி அருகே நிலப் பிரச்சினையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரின் மீது விளக்கம்அளிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த பி.சுப்பிரமணி என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், அவரது உறவினர்கள் முருகன், கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

அதில், ‘‘எனது நிலத்தை பக்கத்து நிலத்தின் உரிமையாளர்களான முருகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் அபகரிக்க முயல்கின்றனர். இவர்கள் மீது திருவலம் காவல் நிலையத்தில் கடந்த மே 28-ம் தேதி அளித்த புகாரின்பேரில் சமுதாய சேவை பதிவேடு (சிஎஸ்ஆர்) நகல்மட்டும் வழங்கப்பட்டது. 29-ம் தேதிஅளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக கடந்த மாதம்26-ம் தேதி முதல்வர், தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அளித்த புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுக்கின்றனர். அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.

எனவே, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதுடன் திமுகபொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முருகன், கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுப்பிரமணி அளித்துள்ள புகார் மனுவின் மீது வரும்ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது வேலூர் மாவட்டஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘சுப்பிரமணி கூறிய புகாரின்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் முருகன், கிருஷ்ணன் ஆகியோர் உறவினர்கள் இல்லை. கடந்த மே மாதம் 25-ம் தேதி சுப்பிரமணி அளித்த புகார் மனுவிலும் துரைமுருகன் பெயர் இல்லை. அவர் அளித்த புகார் மனுவின் மீது சிஎஸ்ஆர் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, அமைச்சரின் பெயரைவேண்டும் என்றே சேர்த்து புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரைஎங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 6-ம் தேதி விளக்கம் அளிக்கப்படும்” என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in