அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: சசிகலா தரப்பில் பதிலளிக்க அவகாசம்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: சசிகலா தரப்பில் பதிலளிக்க அவகாசம்
Updated on
1 min read

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சசிகலா தரப்பில் பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு நிலையில், கடந்த 2017 செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து 2017 அன்றுநடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது எனவும்,குறிப்பாக தங்களை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது எனவும் அறிவிக்கக் கோரி சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இடையில் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கிநடத்தி வருவதால் அவர் இந்தவழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா தரப்பில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரவி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க சசிகலா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 30-க்கு தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in