

ஈரோடு மாநகராட்சியில் 24 மணி நேரமும் பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஈரோடு மாநகராட்சி மற்றும் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.89.39 கோடி மதிப்பீட்டில் நவீன காய்கறி சந்தை வளாகம் மற்றும் சாலைமேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் 94890 92000 என்ற வாட்ஸ்அப் எண் இன்று (நேற்று) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. ஈரோடு மாநகராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பொது சுகாதாரம், தெருவிளக்கு, சாலை மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.
ஈரோடு மாநகராட்சியில் ரூ.32.39 கோடி மதிப்பீட்டில் நேதாஜி காய்கனி மார்க்கெட் வளாகத்தில் புதியதாக கட்டிடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காய்கனி மார்க்கெட் வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், காய்கறிஅங்காடிகள், பழ அங்காடிகள் மற்றும் பழவகைகள் பதப்படுத்துவதற்கு குளிர்பதன கிடங்கு ஆகியவை அமைக்கப்படவுள்ளது.
வைராபாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு பயோ மைனிங் முறையில் 3.41 ஏக்கர் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தினை மியாவாக்கி முறையில் அடர்வனப்பகுதியாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியுடன் அறம்செய் அமைப்பு இணைந்து இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
கட்டிட வரைபடம் அல்லது லே-அவுட் அங்கீகாரம் ஆகியவற்றை 45 வேலைநாட்களுக்குள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளவாறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றனவா என்று பறக்கும்படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பழைய கட்டிடங்களை பொறுத்த வரையில் நீதிமன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது.
சாயக்கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, அரசு கேபிள்டிவி நிறுவனத் தலைவர் சிவகுமார், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.