திமுக இளைஞரணி 41-வது ஆண்டு தொடக்கம்; உதயநிதி செயல்பாடுகளை கண்டு பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

திமுக இளைஞரணி 41-வது ஆண்டு தொடக்கம்; உதயநிதி செயல்பாடுகளை கண்டு பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின் கருத்து
Updated on
1 min read

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளைக் கண்டு பெருமை அடைவதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மொழி காக்க, இனம் உணர்ச்சி பெற, தமிழகம் மேம்பாடு அடைய இயக்கத்தை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக கருணாநிதியால் 1980 ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது.

நான் இன்று இந்த மாபெரும் இயக்கத்தின் தலைவனாக, பரந்து விரிந்த தமிழகத்தின் முதல்வராக இருப்பதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது இளைஞரணிதான். என்னை வார்ப்பித்த பாசறைதான் இளைஞரணி.

இந்த நாற்பதாண்டு காலத்தில் திமுகவின் வெற்றிக்கு, தமிழகத்தின் மேன்மைக்கு இளைஞரணி ஆற்றிய பங்களிப்புகள், செய்த சேவைகளை நினைத்துப் பார்க்கும்போது எனக்கே மலைப்பாக இருக்கிறது. திமுகவின் துணை அமைப்பாக மட்டுமில்லாமல், இணையமைப்பாக இளைஞரணி செயல்பட்டு இயக்கத்தின் வெற்றிக்கு அனைத்துத் தேர்தல்களிலும் பணியாற்றியது. அந்த வகையில் வெற்றி அணியாக இளைஞரணி எந்நாளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இளைஞரணியின் பிறந்தநாளில் இளைஞரணியினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞரணியை வழிநடத்தும் பொறுப்பும் கடமையும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே கட்சிக்காக உழைக்கவும், காலம் பார்க்காமல் செயலாற்றவும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவராக அவர் இருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். முன்பைவிட அதிகமான இளைஞர்களை திமுகவை நோக்கி ஈர்த்தும், ஏராளமானவர்களை கட்சி உறுப்பினர்களாக இணைத்தும், அப்படி இணைந்த இளைஞர்களுக்கு கொள்கை வகுப்புகளை நடத்தியும் செயல்பட்டு வருகிறது இளைஞரணி. இந்தச் சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் இளைஞரணி செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த கரோனா காலத்தில் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், விழாக்கள் நடத்த இயலாது. ஆனாலும் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும் மாற்று தொழில்நுட்ப வழிமுறைகள் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கிறது. இதனை இளைஞரணியினர் பயன்படுத்தி கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in