சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 26 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 26 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்
Updated on
1 min read

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இதுவரையில் மொத்தம் 26 லட்சத்து 33 ஆயிரத்து 822 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் பணி முடிக்கப்பட்ட ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29–ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். சர்வதேச தரத்தில் ரயில் நிலையங்கள், ஏசி வசதிகள், பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், அலுவலக நாட்களில் மெட்ரோ ரயில்களில் போதிய அளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே மக்கள் கூட்டம் இருந்தது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக பணிக்கு செல்வோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 3 வகையான சலுகை பயணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதாவது 7 நாட்களில் 10 முறையும், 30 நாட்களில் 40 முறையும், 60 நாட்களில் 60 முறையும் பயணிக்கலாம். ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் கட்டண சலுகையை பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளிடம் வரவேற்பு இருந்தது. சமீபத்தில் பெய்த கனமழைக்கு பிறகு, கணிசமாக மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில்களில் பயணிகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதன்படி, மெட்ரோ ரயில்வே தொடங்கிய நாள் முதல் இதுவரையில் மொத்தம் 26 லட்சத்து 33 ஆயிரத்து 822 பேர் பயணம் செய்

துள்ளனர். இதில் 26 லட்சத்து 1677 பேர் டோக்கன் மூலமும், 30 ஆயிரத்து 84 பேர் ஸ்மார்ட் கார்டு மூலமும் பயணம் செய்துள்ளனர்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in