

தூத்துக்குடியில் மாநகராட்சி வடிகால் அமைக்கும்பணியால்கோயில் இடிந்து சேதமடைந்ததாகக் கூறி,அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியினர்திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் அனைத்து முக்கிய சாலைகளிலும் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக தருவை மைதானத்துக்கு எதிரே குழி தோண்டியதால், அங்கிருந்த காளியம்மன் கோயில் இடிந்து விழுந்தது. அப்பகுதி மக்களும், இந்து முன்னணியினரும் திரண்டு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாநகர் மாவட்டஇந்து முன்னணி தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்டஅமைப்பாளர் நாராயணன் ராஜ், கோயில் தர்மகர்த்தா ராஜ், தலைவர் வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். `ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட கோயில் சேதமடைந்துள்ளது. இடிந்த கோயிலைமாநகராட்சி நிர்வாகம் கட்டித் தர வேண்டும்’ என அவர்கள் வலியுறுத்தினர்.
டிஎஸ்பி கணேஷ், காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இடிந்து சேதமடைந்த கோயிலை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.