

வீரமுட்டி வாய்க்கால் பாலத்தில் ஒருபக்க தடுப்புச் சுவர் இல்லாததால், இந்த பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் வீரமுட்டி வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடப்பதற்காக திருச்செங்காட்டாங்குடி-புதுக்கடை ஆகிய கிராமங்களுக்கு இடையே வாய்க்காலின் குறுக்கே கான்கிரீட் நடைபாலம் 1996-ம் ஆண்டு ரூ.2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக திருச்செங்காட்டங்குடி, புதுக்கடை, கீழபூதனூர், திருக்கண்ணபுரம் உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் இந்தப் பாலம் வழியாகதான் திருச்செங்காட்டங்குடி அண்ணா மண்டபம் வந்து நாகை, திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த கான்கிரீட் நடைபாலத்தின் ஒரு பக்க தடுப்புச் சுவர் கடந்த ஆண்டு இடிந்து விழுந்து விட்டது. ஆனால், அதன்பிறகு தடுப்புச் சுவர் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த பாலம் வழியாக செல்பவர்கள், உயிர் பயத்துடன்தான் சென்று வருகின்றனர். மேலும் பாலம் அருகில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இப்பாலத்தின் வழியாக செல்பவர்கள் தடுப்புச் சுவர் இல்லாததால் நிலைத் தடுமாறி வாய்க்காலுக்குள் விழும் ஆபத்தான நிலை உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் பாலத்தை சீரமைத்து தரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருமருகல் பொதுப்பணித் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘இந்த பாலம் குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். ஆபத்து கருதி நாங்களும் பலமுறை திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பினோம்.
ஆனால், தடுப்புச் சுவர் கட்ட அனுமதி கிடைக்கவில்லை. தற்போது புதிய அரசு அமைந்துள்ளதால், மீண்டும் திட்ட மதிப்பீட்டை அனுப்பி அனுமதி கோர உள்ளோம். நிதி கிடைத்ததும் உடனடியாக பணி தொடங்கி முடிக்கப்படும்’’ என்றனர்.