Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM

காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை பணி தொடங்கப்படுமா? - பொதுமக்கள், ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

காரைக்கால்

காரைக்கால்-பேரளம் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி, நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

காரைக்கால்-பேரளம் இடையே 23 கி.மீ தொலைவுக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு, 1898-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. 85 ஆண்டுகள் இந்த தடத்தில் ரயில் போக்குவரத்து இருந்த நிலையில், தெற்கு ரயில்வே போதிய வருவாய் இல்லை எனக் கூறி, 1987-ம் ஆண்டில் இந்த ரயில் சேவையை நிறுத்தியது. சிலகாலம் கழித்து அத்தடத்தில் இருந்த தண்டவாளங்களும் அகற்றப்பட்டன. இதையடுத்து, காரைக்காலுக்கு ரயில் போக்குவரத்து இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நாகை மாவட்டம் நாகூரிலிருந்து காரைக்கால் வரை 10.5 கி.மீ தொலைவுக்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, கடந்த 2011-ம் ஆண்டு முதல் மீண்டும் காரைக்காலுக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டபோதே காரைக்கால்-பேரளம் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும், காரைக்கால்-திருநள்ளாறு-அம்பகரத்தூர்-பேரளம் வழித்தடங்கள் இணைக்கப்பட்டால், இப்பகுதி மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு எளிதாக செல்ல முடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2013-14-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதை திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பல நிலைகளைத் தாண்டி காரைக்கால்-பேரளம் இடையே 23 கி.மீ தொலைவுக்கு ரூ.177.69 கோடியில் அகல ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும், முழுமையாகப் பணிகள் தொடங்கப்படாத நிலையில், விரைவாக இத்திட்டத்தை தொடங்கி, நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் ஓய்வுபெற்ற இணை இயக்குநர் ஆர்.மோகன் கூறியது: 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் காரைக்கால்-பேரளம் மற்றும் நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி ஆகிய இரு அகல ரயில் பாதை திட்டங்களையும் இணைத்து ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்நிதி முழுவதும் நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிக்கே செலவிடப்பட்டது. 2020-21 பட்ஜெட்டில் இந்த இரு திட்டங்களுக்கும் ரூ.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாகை-திருத்துறைப்பூண்டி அகலப் பாதை பணிகளை முடிப்பதற்கு தேவைப்படும் ஒரு பகுதி நிதியைத் தவிர, ஒதுக்கப்பட்டுள்ள ரூ.89 கோடியில் பெரும்பான்மையான தொகையை கொண்டு காரைக்கால்-பேரளம் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.

காரைக்கால்-பேரளம் இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை அமைக்க ஓராண்டுக்கு முன்பே ரூ.178 கோடிக்கான ஒப்புதல் ஆணை குடியரசுத்தலைவரால் அளிக்கப்பட்டது. அதன் பின்னர், முதல்கட்டப் பணிகளை தொடங்குவதற்காக ரூ.120 கோடிக்கான ஒப்பந்த ஆணையும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அகல ரயில் பாதை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

காரைக்கால்-பேரளம் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டால், நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பக்தர்கள் ரயில் மூலம் திருநள்ளாறுக்கு வந்து செல்ல முடியும். காரைக்கால்-சென்னை இடையேயான பயண நேரமும் குறையும். வர்த்தகர்களுக்கு பயனளிக்கும். காரைக்கால் மாவட்டத்துக்குள் புதிதாக 4 ரயில் நிலையங்கள் அமையும். சுற்றுலா மேம்பாடு என பல்வேறு நன்மைகள் கிட்டும் என்பதால், இத்திட்டப் பணிகளை விரைந்து தொடங்கி, நிறைவேற்ற புதுச்சேரி அரசும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் காரைக்கால் மாவட்ட மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x