Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM

கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு

திருநெல்வேலி மாவட்டம் செட்டிக் குளத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆட்சியர் வே.விஷ்ணு, அணுமின் நிலைய வளாக இயக்குநர் மனோகர் காட்போலே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றிலிருந்து வீணாகி கடலில் கலக்கும் தண்ணீரை மணக்குடி அருகே மின்நீரேற்றி மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டுவந்து, 52 குளங்களில் தண்ணீர் பெருகச் செய்யும் திட்டப்பணிகளை கூடங்குளம் அணுமின் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்வது, அணுமின் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகேயுள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, மிக்கேல் நகர், ஜார்ஜ் நகர் ஆகிய கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைப்பது, அணுக்கழிவுகளை அணுமின் திட்டப்பகுதிக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ராதாபுரம் தாலுகாவில் உள்ள இளைஞர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சர்வதேச தரத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், அணுமின் நிலைய வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கும், அணுமின் நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் வாரிசுகளுக்கும் முன்னுரிமை அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

கூடங்குளம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு திறந்துவைத்தார். எல் அன்ட் டி நிறுவன நன்கொடையில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 400 முதல் 500 படுக்கை நோயாளி களுக்கு ஒருமணி நேரம் ஆக்சிஜன் கொடுப்பதற்கான திறன் கொண்டது.

நிலையத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது: கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் உள்ளன. தற்போது பிரசவ வார்டும் அமைக்கப் பட்டுள்ளது. நாட்டிலேயே தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்றார்.

ஆட்சியர் வே.விஷ்ணு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ண மூர்த்தி, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ராஜீவ் மான்சர் காட்போலி, எல் அன்ட் டி நிறுவன த்தின் எஸ்.ஏ.சுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x