

அதிமுகவுக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா, எந்த உரிமையில் அதிமுக கொடியைப் பயன்படுத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுக அவைத் தலைவராக இருந்துவரும் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மதுசூதனனைக் காண சேலத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேராக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனைக்கு வந்து மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சசிகலா திடீரென மருத்துவமனைக்கு வந்தார். அவர் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவரது காரில் அதிமுக கொடி கட்டி வந்ததும் சர்ச்சையானது. சசிகலா வரும் தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனையில் 10 நிமிடம் கூட ஆகியிருக்காத நிலையில், அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
பின்னர் மருத்துவமனைக்கு வந்த சசிகலா மருத்துவர்களிடமும், மதுசூதனின் உறவினர்களிடமும் அவரது உடல் நலத்தை விசாரித்தார். பின்னர் வெளியில் வந்து பேட்டி அளித்துவிட்டுச் சென்றார். அவரது காரில் அதிமுக கொடியைக் கட்டி வந்தது சர்ச்சையானது, இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா காரில் அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு வந்தது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பேட்டி:
“ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் போய்ப் பார்க்கலாம், தப்பில்லை. ஆனால், காரில் எப்படி கொடி கட்டிக்கொண்டு போகலாம். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சம்பந்தமே இல்லாமல் அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு எப்படி காரில் போக முடியும்? மருத்துவமனைக்கு நீங்கள் சென்று யாரை வேண்டுமானாலும் பாருங்கள். அதுகுறித்து நாங்கள் ஒன்றும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஆனால், அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு செல்ல சசிகலாவுக்கு எந்தவித உரிமையும் இல்லை. தினகரனை வைத்து தேர்தலில் ஆழம் பார்த்தார்கள். அவரது கட்சி தேர்தலில் என்ன வாக்கு வாங்கியது? தினகரனையும் சசிகலாவையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியுமா?
ஒரே ஜெராக்ஸ்தான் இருவரும். அப்படியிருக்கும்போது தினகரனை வைத்து ஆழம் பார்த்து இவர்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரிந்துவிட்டது. தெரிந்தபின் எப்படி இந்தக் கருத்தெல்லாம் சொல்ல முடியும். அவர் ஒரு பிரதான சக்தியே கிடையாது. பிரதான சக்தியும் இல்லாமல், அதிமுகவுக்கு சம்பந்தமும் இல்லாமல், அதிமுகவுக்குத் தொந்தரவு கொடுக்கும் ஒரு எண்ணத்துடன் இருந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது”.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.