Last Updated : 20 Jul, 2021 06:42 PM

 

Published : 20 Jul 2021 06:42 PM
Last Updated : 20 Jul 2021 06:42 PM

காலையில் டிரான்ஸ்பர்; மாலையில் சஸ்பெண்ட்: ஆணையர் மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

இன்று காலை பணியிட மாற்றம் செய்யப்பட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் புவனேஷ்வரன் மாலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் ஆணையராக புவனேஷ்வரன் (எ) அண்ணாமலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு நகராட்சிகளில் பணியாற்றி வந்த ஆணையர்களைப் பணியிட மாற்றம் செய்து இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, வாணியம்பாடி நகராட்சி ஆணையர் புவனேஷ்வரன் (எ) அண்ணாமலை மயிலாடுதுறை நகராட்சிக்கும், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வாணியம்பாடி நகராட்சிக்கும், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் திண்டிவனம் நகராட்சிக்கும், சிதம்பரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த அஜீதா பர்வீன் ஆம்பூர் நகராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் பாலாற்றின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் ஓடுகிறது. பாலாற்றில் உள்ள தண்ணீரைப் பாசன வசதிக்குப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியில் ஆய்வு செய்ய இன்று காலை வந்தார்.

வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் உள்ள தடுப்பணைப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா, உதயேந்திரம் ஏரிக்குச் செல்லும் கால்வாயைத் தூர்வார வேண்டும். ஏரியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்கள் அனைத்தையும் உடனடியாகத் தூர்வார வேண்டும் எனப் பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா சென்றார். அப்போது ஆணையர் புவனேஷ்வரன் அங்கு இல்லை. அலுவலக ஊழியர்களிடம் ஆவணங்களைக் கொண்டு வரச்சொல்லி ஆட்சியர் கோப்புகளை ஆய்வு செய்தார். ஆட்சியர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்துள்ள தகவல் அறிந்ததும் ஆணையர் புவனேஷ்வரன் அவசர, அவசரமாக அங்கு விரைந்து வந்தார்.

அதன்பிறகு, கரோனா காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், கரோனா பரிசோதனை விவரம், தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட விவரம், நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மைப் பணிகள், டெங்கு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆட்சியர் ஆய்வு செய்தபோது அங்கு ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படாதது தெரியவந்தது.

மேலும், அனுமதியில்லாமல் ஆணையர் புவனேஷ்வரன் அவ்வப்போது விடுப்பில் சென்றது உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீனங்களுடன் நடந்துவந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆணையர் புவனேஷ்வரனைப் பணியிடை நீக்கம் செய்து (சஸ்பெண்ட்) மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x