

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கானாடுகாத்தானில் 150 ஆண்டுகால வீட்டில் 5 தலைமுறையாக வாரிசுகள் வசித்து வருகின்றனர்.
செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றது. நகரத்தார் தங்களது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை வீட்டிலேயே நடத்துவது வழக்கம். அதனால் அவர்கள் தங்களது வீட்டை மண்டபம் போல் கட்டி வைத்துள்ளனர். அந்த வகையில் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் சுவர்கள் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.
இதில் சில வீடுகள் பராமரிப்பின்றிச் சிதிலமடைந்துள்ளன. ஆனால் சிலர் தங்களது வீடுகளைப் பல லட்சம் செலவழித்து இன்றும் புதுப்பொலிவுடன் வைத்துள்ளனர். அந்த வகையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமசாமி (63) குடும்பத்தார் வீடு இன்றும் பொலிவுடன் காணப்படுகிறது. இங்கு 5 தலைமுறையாக வாரிசுகள் வசித்து வருகின்றனர்.
இந்த வீடு ஒரு ஏக்கரில் அமைந்துள்ளது. வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் உள்ளது. மொத்தம் 33 அறைகள் உள்ளன. இதில் 8 அறைகள் மேல் தளத்தில் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 2 அடுக்குகள் உள்ளன. தரைத்தளத்தில் ஆத்தங்குடி டைல் பதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீட்டில் இடது, வலது பக்கம் ஒரே மாதிரியாக இருப்பது அதன் சிறப்பு அம்சம். வீட்டில் கிரானைட் தூண்கள் உட்பட 26 கல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எட்டு மரத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பர்மா தேக்கால் கதவுகள், நிலவுகள், ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்வாசல் கதவும், நிலவும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன.
ஆங்காங்கே பெல்ஜியம் கண்ணாடிகள் உள்ளன. மேற்கூரை முழுவதும் மரங்கள் பதிக்கப்பட்டுள்ளதால் மழை, வெயில் காலங்களில் ஒரே வெப்பநிலையே பராமரிக்கப்படுகிறது. இதனால் மின்விசிறி கூட இயக்கத் தேவையில்லை.
இதுகுறித்து ராமசாமி கூறும்போது, ''இந்த வீட்டில் 5 தலைமுறையாக வசித்து வருகிறோம். இங்கு 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைநீரைச் சேகரிக்க 3 அண்டாக்கள் வைத்துள்ளோம். ஒவ்வொரு அண்டாவிலும் ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேமிக்க முடியும். பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும். அந்த வகையில் இரு வாசல்களும் நேர்க்கோட்டில் உள்ளன.
மேலும் முதல் மாடிக்குச் செல்லும் வழியில் பெரிய மணிக் கூண்டு இருந்தது. வீடு 150 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால் அந்த மணிக் கூண்டை மட்டும் அகற்றிவிட்டோம். எங்கள் வீட்டை வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாட்டவரும் ரசித்துவிட்டுச் செல்கின்றனர். சமீபத்தில் பழமை மாறாமல் பராமரிப்புப் பணிகளைச் செய்தோம்'' என்று தெரிவித்தார்.