அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கலாமா?- உயர் நீதிமன்றம் தெளிவு

அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கலாமா?- உயர் நீதிமன்றம் தெளிவு
Updated on
1 min read

அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாலும், அவர்கள் கலந்துகொள்ள எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி, தடை விதிக்க மறுத்துவிட்டது.

கோவை மாவட்டம், உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எவரும் தேர்வு செய்யப்படவில்லை.

ஆனால், கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான பையா ஆர்.கிருஷ்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி போல, அரசு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி வருகிறார். கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் தலைமையேற்று, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். இது சட்டவிரோதம் என்பதால், அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், தலைமையேற்கவும் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகுமார், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என ஆட்சேபம் தெரிவித்தார்.

வழக்கமாக, அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றபோதும், இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எந்தத் தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்டச் செயலாளருக்குத் தடை விதித்து உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in