Published : 20 Jul 2021 07:29 PM
Last Updated : 20 Jul 2021 07:29 PM

பெகாசஸ் ஸ்பைவேர் உளவுச் செயலி; எங்கள் இயக்கத்தை முடக்க சதி நடக்கிறது: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) உளவுச் செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், அந்நாட்டின் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு, அதன் வாட்ஸ் அப் தகவல்கள் உள்ளிட்ட மொபைல் தரவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன.

‘இதில் வெளியிடப்பட்ட முதல் 150 பேர் பட்டியலில் என் செல்போன்களும் அடக்கம்!’ என அதிரடி கிளப்பியுள்ளார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

கோவை வந்திருந்த அவர் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

மே 17 இயக்கத்தின் தற்போதைய செயல்பாடு எப்படிச் சென்று கொண்டிருக்கிறது?

தமிழர்களின்- உலகத் தமிழர்களின்- ஈழத் தமிழர்களின் உரிமைக்களுக்காகப் பல்வேறு தளங்களில் ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்துச் செய்து வருகிறோம்.

திட்டமிட்ட குறிக்கோள் பாதை துளியும் விலகாமல் அது சென்று கொண்டிருப்பதாக அனுபவத்தில் உணர்கிறீர்களா?

குறிக்கோள் என்பது தனித்து ஒன்றல்ல. அது ஒரு நீண்டகாலப் பணிகள் சார்ந்தது. தமிழர் உரிமை என்பது தொடர்ச்சியாகப் போராடக்கூடிய ஒன்று. அதை நோக்கிய பயணம்- குறிக்கோளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த போன் ஒட்டுக்கேட்பு, புதிய செயலி மூலம் தரவுகள் பதிவிறக்கம் என்பது தமிழ்நாட்டில் உங்களை மட்டும்தான் குறிவைத்துள்ளார்களா?

இப்போதைக்கு என் பெயர் மட்டும்தான் வெளியில் வந்திருக்கிறது. இன்னமும் நிறைய பேர் பெயர் எதிர்காலத்தில் வெளியாகலாம்.

உங்களைப் போன்றோரது போன் தரவுகள் சேகரிப்பதில் இந்த அரசுக்கு என்ன லாபம்?

தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வுரிமைச் சிக்கல்களை முன்வைத்துப் போராடி வரும் நாங்கள் மத்திய பாஜக அரசின் தமிழின விரோதப்போக்கை, சாதி- மத அரசியலைத் தமிழர்களிடையே அம்பலப்படுத்தி வருவதும், தமிழர்களை எளிமையாக அரசியல்படுத்தும் வேலையைச் செய்வதும் மோடி அரசைக் கோபப்பட வைத்துள்ளது.

மீத்தேன் வாயு எதிர்ப்பு போராட்டம், கூடங்குளம் போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் குறித்த பதிவுகளை அதற்குரிய போராட்டங்களைத் தொடர்ந்து செய்யும் எங்களைப் போன்றவர்களை முடக்கிவிட்டால் தமிழக அரசியலில் தாங்கள் இலகுவாகச் செயல்பட முடியும், காலூன்ற முடியும் என்ற நோக்கத்தில்தான் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் பாஜக அரசு இதைச் செய்கிறது.

இப்படி உங்களை வேவு பார்ப்பதில் எந்த மாதிரியான உள்நோக்கம், சதிச் செயல்கள் இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்போது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவரது மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியதுபோல் நிறுவப்பட்டது. அதனை அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியது. இப்படி போலி தரவுகள் மூலம் சிக்க வைக்கப்பட்ட பலர் பிணைகூட வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ளனர். இதேபோல் போலி தரவுகள் நிறுவி என்னையும் சிக்க வைக்கும் கீழ்தர முயற்சியாக இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்பினை எங்கள் இயக்கம் கருதுகிறது.

2019 மக்களவைத் தேர்தலின்போது மே பதினேழு இயக்கத்தின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவிடம் இருந்தது. அதற்காக 2017 முதலே என் மீது உட்பட பல தோழர்கள் மீது கடும் நெருக்கடி திணிக்கப்பட்டது. தமிழீழ இனப் படுகொலை நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டேன்.

குண்டர் சட்டம் உடைக்கப்பட்டு வெளியே வந்து பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்தார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையை ஐநா மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்ததற்காக உபா என்னும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் 40 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது இப்படி செல்போன் வேவுபார்ப்பதன் மூலமாக போலித் தரவுகளை உருவாக்கிக் கொண்டு எங்கள் மே-17 இயக்கத்தை முடக்கவே இவர்கள் திட்டமிடுகிறார்கள்.

இப்போது உங்கள் மீதான வழக்குகள் எல்லாம் என்ன நிலையில் உள்ளன?

சிபிசிஐடி விசாரணையில் பல்வேறு வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. நீதிமன்றங்களில் அதை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். நிச்சயமாக அந்த வழக்குகளிலிருந்து விடுபட்டு வெளியே வருவோம்.

மற்ற இயக்கங்கள், கட்சிகளிடம், கட்சித் தலைவர்களிடம் இதுகுறித்து கண்டனங்கள் வந்த மாதிரி தெரியவில்லையே?

நேற்று இரவுதான் இந்த வேவுபார்த்தல் விவகாரம் வெளியே வந்திருக்கிறது. தலைவர்களின் கண்டனங்களை இனிமேல்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இப்போது ஸ்டாலின் அரசு அமைந்திருக்கிறதே. அதன் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இப்போதுதான் ஆட்சி அமைந்திருக்கிறது. பிறகுதான் பார்த்துச் சொல்ல முடியும்?

தமிழக அரசிடம் இப்படி போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறீர்களா?

அனைவரும் அறிந்த தகவல்தான். அவர்களும் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் எனப் பார்க்கலாம்.

மேற்கொண்டு இந்தி விஷயத்தில் என்ன செய்யலாம் என்று உத்தேசித்துள்ளீர்கள்? நீதிமன்றத்திற்குப் போக உத்தேசமா?

இதில் இந்திய அளவில் பாதிக்கப்பட்ட பலரும் ஒன்றிணைந்து இதுகுறித்த நடவடிக்கை எடுப்பதாக, பேசியிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அப்படி நடந்தால் அவர்களுடன் இணைந்து நின்று செயல்பட உத்தேசித்திருக்கிறோம். நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் செல்வது குறித்து இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் இதற்கு முந்தைய அரசுகளிடம் இப்படியான செயல்பாடுகள் எப்போதாவது இருந்து வந்திருக்கிறதா? ஏனென்றால் எமர்ஜென்சியையே கடந்து வந்தவர்கள் நாம்?

பாஜக ஆட்சிக் காலத்தில்தான் இப்படியான போக்கு மிதமிஞ்சி இருப்பதைத்தான் சமீபகாலமாக பார்த்து வருகிறோம். எமர்ஜென்சி காலத்தில் வெளிப்படையாகவே எமர்ஜென்சி என்று அறிவித்து செய்தார்கள். அதனால் பிரச்சினை இல்லை. இவர்களும் அப்படிச் சொல்லிவிட்டால் பிரச்சினையில்லை. எமர்ஜென்சியைச் சொல்லாமல் ஏன் செய்கிறார்கள் என்று கேட்கிறோம். எமர்ஜென்சி என்று சொல்லிடுங்கள். எமர்ஜென்சியை எதிர்த்தோம் என்று சொல்லக்கூடிய பாஜக அதே வேலையைத் தானே செய்கிறது?

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x