Published : 20 Jul 2021 01:27 PM
Last Updated : 20 Jul 2021 01:27 PM

மதுசூதனன் உடல் நிலையை விசாரிக்க வந்த சசிகலா: அவசர அவசரமாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி

சென்னை

உடல்நலக் குறைவால் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைக் காண அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்த எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக வெளியேறினார்.

தமிழக அரசியல் களத்தில் இரு பெரும் கட்சிகளாக திமுக, அதிமுக உள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வராக இருந்த காலத்தில் சசிகலா செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அம்மா என ஜெயலலிதா அழைக்கப்பட்ட நிலையில், சின்னம்மா என மரியாதையுடன் சசிகலா அழைக்கப்பட்டார்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 75 நாட்களும் அவருடன் மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முதல்வராக அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டு சிறைவாசம் காரணமாகப் பதவி ஏற்க இயலாமல் போனது.

அந்த நேரத்தில் ஓபிஎஸ் பதவி விலகி கட்சிக்கு எதிராக அணி அமைத்தபோது அதிமுகவைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த சசிகலா சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார். அதன்பின் எழுந்த அரசியல் மாற்றத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தனர். சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பொதுச் செயலாளர் பொறுப்பு நீக்கப்பட்டு, ஓபிஎஸ்-இபிஎஸ் பொறுப்புக்கு வந்தனர்.

சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்து அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார். அவர் அதிமுக கொடி கட்டி வந்ததை அதிமுக தலைமை கடுமையாக எதிர்த்தது. அதிமுகவில் சசிகலா இணைவது சாத்தியமே இல்லை எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

தற்போது தேர்தலுக்குப் பின் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், கட்சியை மீட்க மீண்டும் வருவேன், சுற்றுப்பயணம் செல்வேன் என சசிகலா அறிவித்துப் பேசிவருவது அதிமுக தலைமையைப் பதற்றத்தில் ஆழ்த்தியது.

ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுக அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதுசூதனனைக் காண சேலத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேராக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனைக்கு வந்து மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். அவர் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா வந்துள்ள தகவல் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை வந்து 10 நிமிடம் ஆகியிருந்த நிலையில், சசிகலா வருவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து வெளியேறினார்.

பின்னர் சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். அவர் நேராக மருத்துவர்களிடம் சென்று மதுசூதனன் உடல் நலத்தை விசாரித்தார். பின்னர் வெளியே வந்த சசிகலா, “மதுசூதனன் உடல் நிலையை விசாரிக்க வந்தேன். அவர் உறவினர்களிடம் உடல் நிலையைக் கேட்டறிந்தேன். அதிமுக மீது மிகுந்த பற்று கொண்டவர் மதுசூதனன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும், கட்சியை மீண்டும் ஜெயலலிதா காலம்போல் மாற்றுவேன் எனப் பேசிக்கொண்டிருக்கும் சசிகலா, அதிமுக அவைத் தலைவரைக் காண மருத்துவமனைக்கு நேரடியாக வந்ததும், காரில் அதிமுக கொடி கட்டி வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் அதே மருத்துவமனையில் உடனிருந்த சசிகலா, ஜெ. மரணத்திற்குப் பின் தற்போதுதான் முதன்முறையாக மதுசூதனனைப் பார்ப்பதற்கு அதே மருத்துவமனைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x