மின்சாரக் கட்டணம் கணக்கிடும் முறையை மாதம் ஒரு முறையாக மாற்ற தங்கமணி வலியுறுத்தல்

தங்கமணி: கோப்புப்படம்
தங்கமணி: கோப்புப்படம்
Updated on
2 min read

மின்சாரக் கட்டணம் கணக்கிடும் முறையை மாதம் ஒரு முறையாக மாற்றியமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தங்கமணி இன்று (ஜூலை 20) வெளியிட்ட அறிக்கை:

"தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தற்போதைய திமுக ஆட்சியாளர்கள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் அள்ளி வீசிய 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் முதன்மையானது, வீடுகளுக்கான மின் பயன்பாட்டுக் கணக்கெடுப்பை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையில் இருந்து, மாதம் ஒரு முறையாக மாற்றி அமைக்கப்படும் என்பது.

ஜூலை மாதம் 1-ம் தேதி எடுக்க வேண்டிய மீட்டர் ரீடிங் மின்வாரிய ஊழியர்களால் எடுக்கப்படவில்லை. சென்ற 2019 மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத் தொகையையே செலுத்தும்படி இந்த அரசு தெரிவித்தது. 2019-ம் ஆண்டு கரோனா காலம் கிடையாது; அப்போது கோடை காலம். பொதுமக்கள் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தினர். அதே கட்டணத்தை இப்போதும் கட்டச் சொல்லவே, மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்தார்கள்.

ஆனால், 2020-ல் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டபோது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அரசு, 2020 ஜனவரியில் என்ன கட்டச் சொல்லி இருந்தார்களோ, அந்தக் கட்டணத்தையே கட்டச் சொல்லியது.

ஆனால், தற்போதைய திமுக அரசு, கரோனா ஊரடங்கால், மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், 2019 மார்ச் மாத மின்சாரக் கட்டணத்தையே 2021-ல் கட்டச் சொன்னதால், தமிழக மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்தார்கள்.

கரோனா ஊரடங்கால் குறைவான மின்சாரத்தை உபயோகப்படுத்தி இருந்தாலும், அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய தினசரி நாளிதழ்களில் கூட, அதிகப்படியாக விதிக்கப்பட்ட மின் கட்டணத்தால் பெண் தற்கொலை முயற்சி என்று செய்திகள் வெளிவந்துள்ளன. சென்னை, மாதவரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கவுதமன். அவரது மனைவி கருமாரி அவரது 2 வீட்டுக்கு மின் கட்டணமாக 36,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று மாதவரம் மின்வாரியம் தெரிவித்ததாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும், தற்போது அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

சென்னை போன்ற பெருநகரங்களில் குத்துமதிப்பாக ஒரு கணக்குப் போட்டு மின்வாரியத்தால் ஆன்லைன் மூலம் பில் அனுப்பப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் மக்கள் மின் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். இதை வைத்து அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக, டெபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று செய்திகள் வருகின்றன.

அன்றைய திமுக ஆட்சிக் காலத்தில் இருண்ட தமிழகமாக இருந்ததை ஒளிமிகுந்த தமிழகமாக, அதிமுக ஆட்சியும், ஜெயலலிதா அரசும் கடந்த 10 ஆண்டுகளாக மின் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திய தமிழக மக்களை, இந்த 2 மாத கால திமுக ஆட்சி மீண்டும் இருளில் தள்ளியுள்ளது. இன்வெர்ட்டர் உபகரணத்தை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை, தற்போதைய திமுக ஆட்சியாளர்கள் செயற்கையான மின் வெட்டை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், மதுரை உட்பட பல மாவட்டங்களில், பல மணி நேரம் பகலிலும், இரவிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். மீண்டும் மின் கம்பிகளில் துணி காயப்போடும் சூழ்நிலை வந்துவிட்டதே என்று மக்கள் புலம்புகிறார்கள். மேலும், தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தச் சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்கள் உரிய வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது, மேலும், தமிழக மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. மின்சார வாரியத்தின் இத்தகைய நிர்வாகத் திறனற்ற செயல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், உரிய கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கெடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல், மாதந்தோறும் மீட்டர் ரீடிங் எடுக்கும் வகையில் மின்சார வாரியத்துக்கு இந்த அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லையெனில், மின்வெட்டாலும், அதிக மின் கட்டணம் செலுத்த இயலாத சுமையாலும் தவிக்கும் மக்களின் கோபக் கனலுக்கு இந்த அரசு ஆளாகும் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்".

இவ்வாறு தங்கமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in