Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பெட்ரோலியம், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்கள் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், கெயில் போன்ற மத்தியஅரசு நிறுவனங்களால் கடந்த ஆட்சியில் குறிப்பாக 2018-ம் ஆண்டு முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2018 ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 1,000 கி.மீ. நீளத்துக்கு பெருவாரியாக விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலியம், எரிவாயு குழாய்கள் தமிழகத்தில் பதிக்கப்பட்டுள்ளன.

எண்ணூர் - மணலி இடையே குழாய் பதிக்கும் பணி முடிந்து இத்திட்டம் கடந்த 2019 மார்ச் 6-ம்தேதியும், ராமநாதபுரம்- தூத்துக்குடி குழாய் பதிக்கும் திட்டம் கடந்த பிப்.17-ம் தேதியும் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது அப்போதைய துணை முதல்வர் பங்கேற்றார். உண்மை இவ்வாறு இருக்க, இந்த திட்டங்கள் தற்போதுதான் புதிதாக செயல்படுவது போன்ற மாயையை உருவாக்க, குழாய்பதிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டது வேடிக்கை.

நில உரிமையாளர்கள் ஆதரவுடனும், கூடுதல் இழப்பீடு வழங்கியும் இத்திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாத்தியக்கூறு உள்ள இடங்களில் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு வலியுறுத்துகிறது.

இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தங்கள் ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை மறந்து, இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கை வெளியிடுவதை அவர் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x