சசிகலா யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தகவல்

சசிகலா யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தகவல்

Published on

சசிகலா யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 100 பேருக்கு முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும்மளிகைப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக அரசு தற்போது மேகேதாட்டுவில் அணை கட்டப்போவதாக தெரிவித்து வருவது கண்டனத்துக்குரியது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். நதி நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ‘கர்நாடகம் இனி காவிரியின் குறுக்கே அணைகள், தடுப்பணைகள் கட்டக் கூடாது’ என உத்தரவிட்டுள்ளது. இதை மீறி அணை கட்டினால், 16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவர்.

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியதுபோல, அதிமுக ஆட்சியில் கரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை. அப்போது, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தடுப்பூசி போட மக்கள் அச்சப்பட்டனர். மற்றபடி தடுப்பூசி ஏதும் வீணடிக்கப்படவில்லை. கரோனா மூன்றாம் அலை பரவும்சூழலில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெற வேண்டும்.

சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏற்கெனவே பலமுறை அவர் தவறான தகவல்களை தெரிவித்து உள்ளார். எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா, எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் அதிமுகவை அழித்துவிட முடியாது.

சசிகலா அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. அவர் யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதிமுக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in