Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சும் குறுவை நெல் சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை கிராமத்தில் குறுவை நெல் நாற்றுகளை பறிக்கும் விவசாயத் தொழிலாளர்கள். படம்: வி.சுந்தர்ராஜ்

திருச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.5 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.

மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்ததால், தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல்நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து தற்போது சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அதன்படி, தஞ்சாவூர் 1.05லட்சம், திருவாரூர் 1.01 லட்சம்,நாகப்பட்டினம் 4,500, மயிலாடுதுறை 96,750, திருச்சி 12,000, அரியலூர் 3,000, கடலூர் 40,600 ஏக்கர் என மொத்தம் 3,63,100 ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தஞ்சாவூர் 1 லட்சம், திருவாரூர் 92,000,நாகப்பட்டினம் 18,000, மயிலாடுதுறை 92,000, திருச்சி 8,000, அரியலூர் 2,500, கடலூர் 40,000 என மொத்தம் 3,52,500 ஏக்கரில் குறுவை நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன.

மேலும், இந்த மாவட்டங்களில் ஏறத்தாழ 24,000 ஏக்கரில் நடவுக்கான நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. பல இடங்களில் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவை இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.

இதுகுறித்து வேளாண்மைத் துறையினர் கூறும்போது, ‘‘குறுவைசாகுபடிக்காக தமிழக அரசு ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் ரசாயன உரங்கள், பசுந்தாள் உர விதைகள் ஆகியவற்றை இலவசமாகவும், விதைகள் உள்ளிட்டவற்றை மானிய விலையிலும் வழங்கியதாலும், டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்வதாலும் நடப்பு ஆண்டு இலக்கை விஞ்சி குறுவை நெல் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது” என்றனர்.

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x