Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது: தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம்

மேகேதாட்டுவில் கர்நாடகா அணைகட்டக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம் மரவனேரியில் உள்ள பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் நினைவிடத்தில் அவரது 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆடிட்டர் ரமேஷின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 8 ஆண்டுகளாகியும் குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சரை சந்திக்கவுள்ளேன். வழக்கு விசாரணைக்கான தடையை நீக்கி, ஓராண்டுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடுப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதிகமாக தமிழகத்துக்கு தடுப்பூசி கிடைக்க மத்தியஅரசிடம் கோரிக்கை வைக்கப்படும். வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதிமுகவுடன் கூட்டணி சுமுக நிலையில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும்.

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். தொடர்ந்து மறைந்த முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன் வீட்டுக்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x