

கோவைக்கு ரயிலில் ரூ.1.10 கோடிமதிப்புள்ள போதைப் பொருள் கடத்திய நைஜீரிய நாட்டு இளைஞரை மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து கோவைக்கு வரும் ரயிலில் ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதையடுத்து, சென்னை மற்றும் மதுரையை சேர்ந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
டெல்லியில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த ரயிலில் வந்த இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு, அவரது பையை வாங்கி சோதனை செய்தனர். அந்தபையில் 2 கிலோ 235 கிராம் அளவுக்கு ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1.10 கோடி. இதையடுத்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பிடிபட்ட நபர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எக்வின்ஸ் கிங்ஸ்லி(26) என்பதும், திருப்பூரில் தங்கியிருந்து பனியன் உள்ளிட்ட ஆடைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்ததும், டெல்லியில் இருந்து போதைப் பொருளை ரயில் மூலம் கடத்திவந்து, திருப்பூரில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், எக்வின்ஸ் கிங்ஸ்லியை நேற்று கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் யார், போதைப் பொருட்களை யாரிடம் இருந்து வாங்கி வந்தார் என்பதுபோன்ற தகவல்கள் குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.