

மயிலாடும்பாறையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தற்போது 4 பானைகள் கண்டறிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அகழாய்வில் கடந்த, 10 நாட்களுக்கு முன்பு கல்திட்டையில், 70 செ.மீ., நீளம் உள்ள 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு வாள் ஒன்றை கண்டறிந்த நிலையில், தற்போது அதே பகுதியில் 4 பானைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:
மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. கடந்த, 1980 மற்றும் 2003-ல் மேற்கொண்ட ஆய்வுகளில் இவை புதிய கற்காலத்தை சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 3 மாதம் ஆய்வு மேற்கொண்டதில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதே பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 4 பானைகளும் கண்டறியப் பட்டுள்ளது. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்பட்டாலும், பானைகளை ஆய்வுக்கு அனுப்பிய பிறகே அதன் சரியான காலத்தை கணிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.