

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. சென்னை சாலிகிராமம் மஜீத் நகரில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் 85 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தனியார் சிலரால் வாகனங்கள் நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் அண்மையில் இந்த நிலம் மீட்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க, நிலத்தைச் சுற்றி இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
அருகில் உள்ள மசூதிக்கு செல்லும் பாதைக்காக வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து சுமார் 1,600 சதுரஅடி இடத்தை வழங்கியுள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் கூறியதாவது:
மஜீத் நகரில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, நிலத்துக்கு அருகில் உள்ள மசூதிக்குச் செல்வதற்கான பாதைக்காக குறிப்பிட்ட இடத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி முஸ்லிம்கள் முறையிட்டனர். அவ்வாறு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மசூதியின் ஒலிபெருக்கி மூலம் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களை அழைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், 20 அடி அகலம் 80 அடி நீளம் என சுமார் 1,600 சதுரஅடி கோயில் இடம் மசூதிக்கு செல்வதற்கான பாதைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மசூதிக்கு வழங்கிய கோயில் இடத்தை அதிகாரிகள் உடனடியாக மீட்க வேண்டும். மேலும், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்துவதா அல்லது சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டபோது, அவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அறநிலையத் துறையில் கேட்டபோது, ‘‘தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலங்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
மசூதி பாதைக்காக வடபழனி முருகன் கோயில் நிலம் அளிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். எப்படி இருந்தாலும் கோயில் நிலங்கள் யாருக்கும் இனாமாக கொடுக்கப்படாது’’ என்று தெரிவித்தனர்.