

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னைகுடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த மாதம் 14-ம்தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து வருகிறது.
தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த மாதம் 16-ம்தேதி வந்த அந்நீர் அன்றே பூண்டி ஏரியை அடைந்தது.
நேற்றைய நிலவரப்படி, கண்டலேறு அணையில் விநாடிக்கு 2,100 கன அடி அளவில் திறக்கப்படும் கிருஷ்ணாநீர், ஜீரோ பாயிண்டுக்கு விநாடிக்கு 722 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் மழைபெய்து வருகிறது. ஆகவே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 5 ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர் இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில்27 அடியும், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.26 அடியும், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 20.12 அடியும்,18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 13.76 அடியும், 36.61அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 34.50 அடியும் நீர் இருப்பு உள்ளது.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டிஎம்சி. தற்போது இவற்றில் நீர் இருப்பு 7.469 டிஎம்சியாக உள்ளது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.