

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வடவாம்பலத்தில் உள்ள ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்துக்குச் செல்லும் வெள்ளிக் கவசத்துக்கு சங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று இந்த பூஜைகளை செய்தார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 58-வது பீடாதிபதியாக இருந்தவர் ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது அதிஷ்டானம் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது. இந்த அதிஷ்டானம் காஞ்சி மகா பெரியவரால் அடையாளம் காட்டப்பட்டு தற்போது அங்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்துக்கு புதிதாக வெள்ளி முகக் கவசமும், நாகக் கவசமும் செய்யப்பட்டுள்ளன. இந்த கவசங்கள் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மஹா பெரியவர் அதிஷ்டானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், காஞ்சிபுரம் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கவசங்கள் வடவாம்பலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சங்கர மடம் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.