Published : 10 Feb 2016 04:39 PM
Last Updated : 10 Feb 2016 04:39 PM

தனியார் துறையில் இடஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சமூக நீதியை வளர்க்கும் இப்பரிந்துரையை பாமக வரவேற்கிறது.

அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்வது தான் முழுமையான சமூகநீதியாக இருக்கும் என்பதால் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், தனியார் துறை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாத கட்டாயம் என்று பாமக கூறி வருகிறது.

பாமகவின் இந்த கருத்தை எதிரொலிக்கும் வகையில் தனியார் துறையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முதன்முறையாக பரிந்துரை அறிக்கையை அனுப்பிவைத்துள்ளது.

இந்தியாவில் சமூக - பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சமூக நீதிப் பயணத்தின் ஒரு கட்டமாக மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு கடந்த 1990 ஆம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளில் நான்கில் மூன்று பங்கு தனியார் துறையில் தான் உள்ளது என்பதால் தனியார் துறை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் சமூக - பொருளாதார சமத்துவம் கொண்ட இந்தியாவை உருவாக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து, தனியார் நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலத்தில் எழுப்பப்பட்ட போதெல்லாம், தனியார் துறையினரே இந்த இட ஒதுக்கீட்டை தானாக முன்வந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவந்தது.

ஆனால், அரசுத்துறையில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் தனியார் துறை இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி கனவு நிறைவேறவில்லை. தனியார் துறையினர் தாமாக முன்வந்து இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு கானல் நீராகவே இருக்கும் என்பதால், அவர்களின் முடிவுக்காக மத்திய அரசு இனியும் காத்திருக்காமல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இந்த பரிந்துரை குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழில் மற்றும் வணிக நிறுவன அமைப்புகள், தகுதி அடிப்படையில் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. இது இட ஒதுக்கீடு மற்றும் தகுதி குறித்த புரிதல் இல்லாத அபத்தமான வாதம் ஆகும்.

சமூக நீதி என்ற மரத்தின் வேரில் அமிலம் ஊற்றும் முயற்சி ஆகும். இட ஒதுக்கீடும், தகுதியும் வெவ்வேறு துருவங்கள் அல்ல... இரண்டுமே இணைந்து பயணிக்கும் தண்டவாளங்கள் தான். இட ஒதுக்கீட்டில் கல்வி பயில்வருக்கோ, வேலை பெறுபவருக்கோ திறமை இருக்காது என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தகுதியிலோ, திறமையிலோ யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து இம்முயற்சிக்கு தொழில்துறையினர் ஒத்துழைக்க வேண்டும்.

தனியார் துறை வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமின்றி, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இதுபற்றி விவாதிப்பதற்காக உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x