

திருவள்ளூர் மாவட்டம், புதிய எருமைவெட்டிபாளையம் கோதண்டராமர் கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக இந்து சமய அறநிலைய நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள புதிய எருமைவெட்டிபாளையத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோயில், வரமூத்தீஸ்வரர் கோயில் மற்றும் அங்காளபரமேஸ்வரி கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், கோயில்களில் பக்தர்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்து வரும் திருப்பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை, பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயில்களில் திருவிழாக்கள், பூஜைகள், யாகங்கள் உள்ளிட்ட உற்சவங்கள் நடத்துவதற்கான தடை வரும் 31-ம் தேதி வரை நீடிக்கிறது.
ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு, முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் அறிவிக்கப்படும் தளர்வுகளைப் பொறுத்து, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை, பெரியபாளையம் பவானியம்மன் ஆடி மாத திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.
மிகவும் எளிமையாக...
அந்த முடிவின்படி, இரு கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டால், காவல் துறை, வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகள் வாயிலாக குழுக்கள் அமைத்து, கலந்தாலோசித்து, எளிமையாக திருவிழாக்களை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் எம்எல்ஏக்கள் சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, கணபதி, ஜோசப் சாமுவேல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.