Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

சான்றளிப்பு கையெழுத்துக்கு பணம் வசூலிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்களுக்கு ஆட்சியர் மோகன் டோக்கன் வழங்குகிறார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதார் அட்டை முகவரி திருத்த பொதுமக்கள் மிகுந்த அவலத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு தேவையான ஆவணங்களில் சான்றளிப்பு செய்ய அரசு ஊழியர்கள் சிலர் ரூ. 300 வரை பணம் வாங்குகின்றனர். ஆதார் கார்டுகளில் முகவரி திருத்தம் செய்ய இ-சேவை மையங்களில் ரூ. 200 வரை பணம் கேட்பதாக கடந்த 17-ம் தேதி இந்து தமிழ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரிசையில் நின்றிருந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை பெற்று ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் வரிசைகிரமமாக இல்லாமல் தாறுமாறாக இருந்தது. இதுதொடர்பாக இ - சேவை பணியாளர்களை எச்சரித்தார். பின்னர் அங்கிருந்த விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியனிடம், இ சேவை மையத்தின் நடவடிக் கைகளை கண்காணிக்க தவறிய கேபிள் டி வி வட்டாட்சியர் சீனுவாசன் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இதற்கான கோப்பை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் தன் கைப்பட எண்களை எழுதி வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியது, "ஆதார் அட்டை முகவரி திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு சான்றளிப்பு கையெழுத்து போட பணம் வசூலிக்கும் அலுவலர்கள் மீது புகார் பெறப்பட்டால் குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x